பத்தலப்பல்லி அணை கட்டும் திட்டம்மழை நீர் வீணாவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

பத்தலப்பல்லி அணை கட்டும் திட்டம்மழை நீர் வீணாவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

April 1, 2018 0 By AmburTimes
Spread the love

2018-04-01 07:22:01
பத்தலப்பல்லி அணை கட்டும் திட்டம்
மழை நீர் வீணாவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

வ.செந்தில்குமார்
மலட்டாற்றின் குறுக்கே பாதியில் நிறுத்தப்பட்ட அணை கட்டும் பணி.
கடந்த 10 ஆண்டுகளாக பத்தலப்பல்லி அணை கட்டுமானத் திட்டம் கிடப்பில் போடப்பட்டதால், மழை நீரை சேமிக்க முடியவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தமிழக -ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள கவுன்டன்யா வனப் பகுதியிலிருந்து உருவாகும் மலட்டாறு மதினாப் பல்லி, நரியம்பட்டு வழியாக பச்சகுப்பம் அருகே பாலாற்றில் கலக்கிறது. மலட்டாறைப் போன்றே தமிழக -ஆந்திர வனப் பகுதியில் பெய்யும் மழை நீரால் சேராங்கல் ஆறு, மதினாப் பல்லி ஆற்றில் ஆண்டுதோறும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பாலாற்றில் கலக்கிறது. இதன் மூலம் பேரணாம்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் செழிப்பாகவும் குடிநீருக்கு தட்டுப்பாடு இல்லாமலும் இருந்தது.

இதற்கிடையில், கடந்த 2005-ம் ஆண்டு பத்தலப்பல்லி கிராமத்தில் மலட்டாற்றின் குறுக்கே ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் அணை கட்டும் பணி தொடங்கப்பட்டது. நபார்டு வங்கி உதவியுடன் தொடங்கப்பட்ட இந்த அணை 577 மீட்டர் நீளம் கொண்டது. அணையின் முழு கொள்ளளவு 120 மில்லியன் கன அடியாகும். இந்த அணையால் பேரணாம்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 4 ஆயிரத்து 242 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுவதுடன் 8 ஏரிகளில் தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.

அணை கட்டுமான பணி தொடங்கிய நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஒப்பந்தத்தை பொதுப் பணித் துறை அதிகாரிகள் திடீரென ரத்து செய்தனர். நீதிமன்ற நடவடிக்கையின் காரணமாக அதே நிறுவனத்துக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது. அதன்படி, கடந்த 2008-ம் ஆண்டு மீண்டும் பணி தொடங்கப்பட்டது.

இதன் முதல் கட்டமாக மண்ணாலான அணை கட்டப்பட்டது. அதன் மீது உறுதியான கான்கிரீட் அணை கட்டுமான பணி தொடங்கப்பட இருந்தது. மேலும், பாலூர் கிராமத்தில் 30 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்கும் பேபி அணை கட்டுமானப் பணி முடிக்கப்பட்டது.

அதே நேரம், 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்க வேண்டிய பணியில் தாமதம் ஏற்பட்டது. எனவே, கட்டுமான நிறுவனத்தின் ஒப்பந்தம் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பான, வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் பொதுப் பணித் துறைக்கு சாதகமான தீர்ப்பு வந்தது.

இதன் காரணமாக, திருத்திய திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணியைத் தொடங்க பொதுப் பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதற்கான, மறு மதிப்பீட்டு திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அரசு தரப்பில் நிதி ஒதுக்கீடு செய்யாததால் அணை கட்டும் திட்டம் கிடப்பிலேயே உள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பத்தலப்பல்லி அணை கட்டுமான திட்டத்துக்காக ரூ.115 கோடியில் மறு மதிப்பீட்டுக்கான அறிக்கையை அரசுக்கு அனுப்பி உள்ளோம்’’ என்றனர்.

Courtesy: தமிழ் தி இந்து நாளிதழ்

Source

0