பேரணாம்பட்டில் பேருந்து நிலையம் இடமாற்றத்தைக் கண்டித்துபல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பேரணாம்பட்டில் பேருந்து நிலையம் இடமாற்றத்தைக் கண்டித்துபல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

March 31, 2018 0 By AmburTimes
Spread the love

2018-03-31 09:42:14
பேரணாம்பட்டில் பேருந்து நிலையம் இடமாற்றத்தைக் கண்டித்து
பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பேரணாம்பட்டில் பேருந்து நிலையம் இடமாற்றத்தைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.
பேரணாம்பட்டில் பயன்பாட்டில் உள்ள பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியே இடமாற்றம் செய்யக் கூடாது என்று கூறி, பல்வேறு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பேரணாம்பட்டு காவல் நிலையத்துக்கு அருகே பேருந்து நிலையம் உள்ளது. பல ஆண்டுகளாக செயல்படும் இந்த பேருந்து நிலையம் போதிய இடவசதியின்றி இயங்கி வருகிறது. பேருந்துகள் வந்து செல்வதில் சிரமமாக உள்ளதால், சாலையோரத்திலேயே பேருந்துகளை நிறுத்தி, பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்கின்றனர்.

எனவே, பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் பேரணாம்பட்டு பேருந்து நிலையம் விரிவாக்கம் என்ற உறுதிமொழி அனைத்துக் கட்சிகளின் வாக்குறுதியாகவும் இருக்கும்.

நகரில் புதிய இடத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு இட வசதி இல்லை. இதனால், நகருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது. இதற்கான இடம் தேர்வான நிலையில் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

நகருக்கு வெளியே பேருந்து நிலையம் செல்வதால் இரவு நேரத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும். தற்போதுள்ள பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு ஆட்டோக்களில் செல்ல கூடுதல் செலவாகும். எனவே, பேரணாம்பட்டு காவல் நிலையத்தை இடமாற்றம் செய்து, அந்த இடத்தில் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், தற்போதுள்ள பேருந்து நிலையமே காவல் நிலையத்துக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. எனவே, பேருந்து நிலைய விரிவாக்கப் பணிக்காக தங்களது இடத்தைக் கொடுக்க முடியாது என்று மாவட்ட காவல் துறை ஏற்கெனவே தெரிவித்து விட்டது. மேலும், பேருந்து நிலையத்தை காலி செய்து அந்த இடத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறிவிட்டனர்.

இதற்கிடையில், தனி நபர் சிலர் பேரணாம்பட்டு நகரிலிருந்து 1 கி.மீ தொலைவில் 8 ஏக்கர் நிலத்தில் வீட்டு மனைப் பிரிவுகளை அமைத்துள்ளனர். அந்த மனைப் பிரிவின் ஒரு பகுதியில் ஓர் ஏக்கர் நிலத்தை பேருந்து நிலையத்துக்காக அளிக்க நிலத்தின் உரிமையாளர்கள் முன் வந்துள்ளனர். பேருந்து நிலையத்துக்கான ஓர் ஏக்கர் நிலத்தை பேரணாம்பட்டு வட்டாட்சியர் பெயருக்கு சில நாட்களுக்கு முன்பு தானப் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர்.

எனவே, புதிய இடத்தில் பேரணாம்பட்டு பேருந்து நிலையம் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு, பேரணாம்பட்டு நகரில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.

Courtesy :தமிழ் தி இந்து நாளிதழில்

Source

0