அதிகத் தண்ணீர் ஆபத்தா..?

அதிகத் தண்ணீர் ஆபத்தா..?

March 15, 2018 0 By AmburTimes
Spread the love

2018-03-15 04:44:09
அதிகத் தண்ணீர் ஆபத்தா..?

டாக்டர் கு. கணேசன்

நான் நாளொன்றுக்கு 2 லிட்டர் மண்பானைத் தண்ணீர் குடிக்கிறேன். இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது. பயணத்தில் இருந்தாலும் இதே நிலைமைதான். டாக்டர்கள் சிலரும் ஹீலர்களும் அதிக தண்ணீரைக் குடித்து, சிறுநீரகத்துக்கு அதிக வேலை கொடுத்து, ஏன் அதைப் பலவீனமாக்குகிறீர்கள் என்று கேட்கின்றனர். அதனால், நான் தாகம் எடுக்கும்போது மட்டுமே தண்ணீர் குடிக்கிறேன். ஹீலர்கள் கூறுவதுபோல் தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் குடித்தால் சிறுநீரகத்துக்கு ஆபத்தா?

– கமால் மொஹதீன், மின்னஞ்சல்

அதிகச் சுமையைச் சுமந்தால் முதுகு வலிக்கும் எனப் பயப்படும் சுமைக் கூலிகள் அந்தத் தொழிலைச் செய்ய முடியுமா? அதுபோலத்தான் சிறுநீரகமும். தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் குடித்தால், ஆரோக்கியமுள்ள சிறுநீரகம் அதைச் சிறுநீரில் வெளியேற்றிவிடும். அது பலவீனம் ஆவதில்லை. எனவே, ஆபத்தில்லை. சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால், இந்தச் சந்தேகம் தேவையில்லை.

சிறுநீரகத்தில் பிரச்சினை உள்ளவர்கள், இதயச் செயலிழப்பு (Heart failure) ஏற்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தண்ணீர் குடிக்க வேண்டும். இவர்களுக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவு மற்றவர்களைவிடக் குறைவாகவே இருக்கும். இது தெரியாமல் எப்போதும்போல் இவர்கள் தண்ணீரைக் குடிப்பார்களேயானால் சிறுநீரகத்துக்கும் இதயத்துக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு.

பயம் வேண்டாம்!

உங்களைப் பொறுத்த அளவில் தவறான ஆலோசனைகளால், தண்ணீர் குடிக்கப் பயப்படுவதுபோல் தெரிகிறது. நீங்கள் தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது போதுமானது அல்ல! இவ்வாறு தண்ணீரைக் குடிப்பது குறைகிறபோது பால், மோர், தயிர், இளநீர், பதனீர், நீராகாரம் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும்; நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். தண்ணீரைத் தேவைக்கு அதிகமாகக் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகளைவிட, குறைவாகக் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்தான் உடலில் அதிகம்.

நீரின் சமநிலை

பொதுவாக, நாம் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவும் உடலிலிருந்து அது வெளியேறும் அளவும் சமமாக இருக்க வேண்டும். அப்போதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்து வராது. இதற்குச் சிறுநீரகம் உதவுகிறது. உடலில் நீரின் அளவு சிறிது அதிகமாகிவிட்டாலும், சிறுநீரகங்கள் இரண்டும் அதிகமாக வேலைசெய்து அதிகப்படியாக உள்ள நீரைச் சிறுநீரில் வெளியேற்றி, உடல் திரவங்களைச் சமன்படுத்திவிடும்.

தேவை எவ்வளவு?

வயது, உடல் எடை, உடல் உழைப்பு, உணவுப் பழக்கம், காலநிலை, உடலில் உள்ள நோய்நிலை என்று பல காரணிகள் ஒருவருடைய தண்ணீர்த் தேவையை நிர்ணயிக்கின்றன. என்றாலும் ஆரோக்கியமாக உள்ள ஒருவர் தினமும் 1,200-லிருந்து 1,500 மி.லி.வரை சிறுநீர் கழிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் சேரும் யூரியா, கிரியேட்டினின் போன்ற கழிவு உப்புகள் சிறுநீரில் சரியாக வெளியேற முடியும். இதற்குத் தினமும் 2,400-லிருந்து 3,000 மி.லி.வரை தண்ணீர் குடிக்க வேண்டும். கோடையில் அதிகபட்சமாகத் தினமும் 4 லிட்டர்வரை தண்ணீர் குடிக்கலாம். தாகம் ஏற்பட்டால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று காத்திருக்கத் தேவையில்லை.

தேவைக்குக் குடிக்கிறீர்களா?

நீங்கள் தேவைக்குத் தண்ணீர் குடிக்கிறீர்களா என்பதையும், உடலில் தண்ணீரின் அளவு சரியாக இருக்கிறதா என்பதையும் சிறுநீரைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். வெளிர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் காணப்பட்டால், நீங்கள் தேவைக்குத் தண்ணீர் குடிக்கிறீர்கள். அடர்ந்த மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போனால், நீங்கள் தேவைக்குத் தண்ணீர் குடிக்கவில்லை. அடுத்து, நாவறட்சி எடுப்பதும் தொண்டை வறண்டு தண்ணீர் தாகம் எடுப்பதும் உடலில் தண்ணீர் அளவு குறைவாக உள்ளது என்பதை இனம் காட்டும் முக்கியமான அறிகுறிகளே.

கோடையில் அதிகப்படியாகும் வெப்பத்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து, நீர் வறட்சிப் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் சிறுநீர்க்கடுப்பு ஏற்படுகிறது. தோல் வறட்சி, தலைவலி, கிறுகிறுப்பு, மயக்கம் போன்றவையும் உடலில் தண்ணீரின் அளவு குறைந்துவிட்டது என்பதைக் காட்டும் அறிகுறிகளே! சிறுநீரகக் கல் உருவாவதற்கும் மலச்சிக்கலுக்கும் பல காரணங்கள் இருந்தாலும் அடிப்படைக் காரணம், உடலில் திரவ அளவு குறைவதுதான். அதாவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான்.

அளவு அதிகமாகிவிட்டால்?

அதேநேரத்தில், தேவையில்லாமல் அதிகமாகத் தண்ணீர் குடிக்கிறீர்கள் என்றாலும், உடலில் நீரின் அளவு அதிகமாகிவிட்டது என்றாலும் சிறுநீரகம், அதை வெளியேற்றச் சிரமப்படுகிறது என்பதைச் சில அறிகுறிகள் மூலம் தெரிவித்துவிடும். குறிப்பாக, முகம் வீங்குவது இதற்குரிய முக்கிய அறிகுறி. கால் பாதங்கள் வீங்குவது, வயிறு வீங்குவது போன்ற அறிகுறிகளும் தோன்றும். அப்போது மருத்துவரின் ஆலோசனைப்படி தண்ணீர் குடிக்க வேண்டும்.

நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியதுள்ளது எனத் தெரிவித்துள்ளீர்கள். உங்கள் வயதைத் தெரிவிக்கவில்லை. பொதுவாக, 50 வயதுக்கு மேல் இது இயல்பு. நீரிழிவு, புராஸ்டேட் பிரச்சினை போன்ற காரணங்களாலும் அடிக்கடி சிறுநீர் கழியும். இவற்றுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டு, சந்தேகம் தெளியுங்கள்.

 

Source

0