இணையவழி பத்திரப்பதிவு நடைமுறையால் பொதுமக்கள் அலைக்கழிப்பு

இணையவழி பத்திரப்பதிவு நடைமுறையால் பொதுமக்கள் அலைக்கழிப்பு

March 15, 2018 0 By AmburTimes
Spread the love

2018-03-15 04:52:32
இணையவழி பத்திரப்பதிவு நடைமுறையால் பொதுமக்கள் அலைக்கழிப்பு

பத்திரப்பதிவு அலுவலகங்களில் இணையவழி (ஆன்லைன்) நடைமுறை பின்பற்றப்படும் சூழ்நிலையில், அதன் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் தங்களுக்கு வரவில்லையெனக் கூறி பத்திரப்பதிவுத் துறைப் பணியாளர்கள் அலைக்கழிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பத்திரப்பதிவுத் துறையில் நடைபெறும் முறைகேடுகளை களையும் வகையில் பத்திரப்பதிவு ஆவணங்கள் உள்ளிட்டவற்றை இணையவழி மூலம் மேற்கொள்ள தமிழக அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.

பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சொத்தின் வில்லங்கச் சான்றுகள், சொத்துப் பத்திரங்களின் சான்றிட்ட நகல்கள் ஆகியவைற்றை கூட இணையவழி மூலமே விண்ணப்பித்து பெற வழிவகை செய்யப்பட்டுள்ளன. அதற்கான கட்டணங்களையும் இணையவழியிலேயே செலுத்தலாம்.
இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர் அலுவலகங்கள், பதிவாளர் அலுவலகங்களுடைய இணையதளத்துக்கு செல்கின்றன. அதை அவ்வப்போது பார்வையிட்டு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் கோரிக்கையின் அடிப்படையில் தேவைப்படும் ஆவணங்களை சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வழங்க வேண்டும்.

இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுடைய அடையாள ஆவணங்களின் எண்கள் விண்ணப்பிக்கும்போதே இணையதளத்தில் கோரப்படுகிறது. அவ்வாறு கோரப்படும் விண்ணப்பதாரரின் அடையாள ஆவணங்களை சம்பந்தப்பட்ட பதிவாளர், சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு எடுத்துச் சென்று காண்பித்து தாங்கள் கோரிய ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் இதற்கு முன் பத்திர எழுத்தர்கள் மூலம் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான ஆவணங்களை விண்ணப்பித்துப் பெற வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன.

குறிப்பாக பொதுமக்களிடம் இருந்து பத்திர எழுத்தர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தனர். மேலும், பத்திரப்பதிவுத் துறை பணியாளர்கள், அலுவலர்களுக்கும் கூட பத்திர எழுத்தர்கள் மூலம் கையூட்டு கொடுக்க வேண்டிய நிலை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இணையவழி நடைமுறைகள் தொடங்கிய பிறகு பொதுமக்களுக்கான சிரமங்கள் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இணையவழியில் விண்ணப்பித்து குறிப்பிட்ட சில நாள்கள் கழித்து சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர் அலுவலகங்களுக்குச் சென்று இணையவழி கோரிக்கை விண்ணப்ப எண்ணை அங்குள்ள பணியாளர்கள், அலுவலர்களிடம் காட்டினால் அவர்கள் அதை சரிவர பார்க்காமல் அதுபோன்ற எவ்வித விண்ணப்பங்களும் வரவில்லையெனக் கூறி பொதுமக்களை திருப்பி அனுப்பிவிடுகின்றனர். இதனால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

ஏனெனில் நேரடியாக பொதுமக்களே விண்ணப்பித்தால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போய்விட்டதே என்ற எண்ணத்தில் பணியாளர்கள் இணையவழி விண்ணப்பங்களை சரிவர பார்ப்பதில்லை. இதில், பல பணியாளர்களுக்கு இணையவழியில் வரும் விண்ணப்பங்களைப் பார்வையிட கூட தெரியவில்லை. இதனால் ஆவணங்கள் உரிய நேரத்தில் கிடைக்காமல் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, பத்திரப்பதிவுத் துறை உயரதிகாரிகள் உடனடியாக இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் எனவும், இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களை சரிவர பார்வையிட பணியாளர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல விண்ணப்பித்தவுடன் எத்தனை நாள்களுக்குள் ஆவணங்கள் வழங்கப்படும் என்பதை இணையதளத்தில் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் பெரிய எழுத்துகளில் அறிவிக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Courtesy: தினமணி நாளிதழ்

Source

0