பள்ளியில் ஹீலியம் சிலிண்டர் வெடித்து விபத்து மகன் சிகிச்சைக்காக ஆட்சியர் அலுவலகத்தில் மடிப்பிச்சை எடுத்த தாய்

பள்ளியில் ஹீலியம் சிலிண்டர் வெடித்து விபத்து மகன் சிகிச்சைக்காக ஆட்சியர் அலுவலகத்தில் மடிப்பிச்சை எடுத்த தாய்

March 13, 2018 0 By AmburTimes
Spread the love

2018-03-13 06:07:57
பள்ளியில் ஹீலியம் சிலிண்டர் வெடித்து விபத்து மகன் சிகிச்சைக்காக ஆட்சியர் அலுவலகத்தில் மடிப்பிச்சை எடுத்த தாய்

பள்ளி ஆண்டு விழாவில், ஹீலியம் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த மகனுக்கு மருத்துவ வசதி கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் அவரது தாயார் மடிப் பிச்சை ஏந்தி கதறினார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், மாவட்ட ஆட்சியர் ராமன், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் செங்கோட்டையன் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டனர். குறைதீர்வுக் கூட்டத்தில் மொத்தம் 438 மனுக்கள் பெறப்பட்டன.

வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த சிவலிங்கம், செல்வி தம்பதியினர் கண்ணீர் மல்க ஆட்சியர் ராமனிடம் அளித்த மனுவில், ‘‘எனது மகன் நவீன் (17), வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த ஜனவரி 31-ம் தேதி பாகாயம் சிஎம்சி விளையாட்டுத் திடலில் பலூன் நிரப்பும் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் படுகாயம் அடைந்தார். வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் 25 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்தார்.

சிகிச்சைக்கு அதிகம் பணம் செலவாகிறது. சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்த எங்களால் தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியவில்லை. பள்ளி நிர்வாகத்தினரால் எங்களுக்கு போதிய உதவி கிடைக்கவில்லை. தினமும் மருத்துவச் செலவுக்கு ஆயிரத்துக்கும் மேல் செலவாகிறது. ஏற்கெனவே அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், அவர் முழுமையாக குணமாக அதிக பணம் செலவாகும் என்று தெரிகிறது. எங்களால் அவ்வளவு செலவு செய்ய வசதி இல்லாமல் இருக்கிறோம். எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

மனு அளிப்பதற்காக தங்களது மகன் நவீனை சக்கர நாற்காலியில் பெற்றோர் அழைத்து வந்தனர். அப்போது, நவீனின் தாய் செல்வி, சிகிச்சைக்கான வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கூறி மடிப் பிச்சை ஏந்தி கதறி அழுத சம்பவம், அங்கிருந்தோரை நெகிழ வைத்தது.

Courtesy: தமிழ் தி இந்து நாளிதழ்

Source

0