சுய ஒழுக்கமுள்ள தனிநபர்களே தேசத்தின் சொத்து: வேலூரில் உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு

சுய ஒழுக்கமுள்ள தனிநபர்களே தேசத்தின் சொத்து: வேலூரில் உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு

March 10, 2018 0 By AmburTimes
Spread the love

2018-03-10 05:51:26
சுய ஒழுக்கமுள்ள தனிநபர்களே தேசத்தின் சொத்து: திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு

Click Here To View Original News

சுய ஒழுக்கமுள்ள தனிநபர்களே தேசத்தின் சொத்தாக விளங்குகின்றனர். அவர்கள் எவ்வித சவால்களையும் எதிர்கொள்ளக் கூடியவராக திகழ்வர் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வா.பார்த்திபன் பேசினார்.

வேலூர் மாவட்டம், சேர்க்
காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 13-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் தலைமை வகித்து, 234 பேருக்கு பட்டங்கள் வழங்கி கௌரவித்தார். மேலும், தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற இளங்கலை மாணவர்கள் 33 பேருக்கும், முதுகலை மாணவர்கள் 16 பேருக்கு பரிசுகளையும் வழங்கினார்.

விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வா.பார்த்திபன் பேசியதாவது:
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு நடந்த முதல் பட்டமளிப்பு விழாவில் 201 மாணவர்கள் பட்டங்கள் பெற்றனர். பின்னர், ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை அடுத்து, இந்த ஆண்டு 49,789 மாணவர்கள் பட்டங்கள் பெறும் அளவுக்கு இப்பல்கலைக்கழகம் வளர்ச்சி பெற்றிருப்பது பாராட்டுக்குரியது.

மாணவர்கள் வாழ்க்கை அனுபவங்களை நல்ல விதத்தில் உள்வாங்கிக் கொண்டு அதை சமுதாயம் பயன்பெறும் வகையில் செயல்களாக மாற்றிட வேண்டும். அத்தகைய செயல்களே வாழ்க்கையை முழுமைப்படுத்துவதுடன், சமுதாயத்தையும், நாட்டையும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.

மாணவர்கள் சுதந்திரமான சிந்தனை, திட்டம், செயல் ஆகியவற்றை ஆழ்மனதில் உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கு சுய ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் மட்டுமே முடியும். அத்தகைய சுய ஒழுக்கமுள்ள தனிநபர்கள் தேசத்துக்கு மிகப்பெரிய சொத்தாக விளங்குவர். அவர்கள் எவ்வித சவால்களையும் எதிர்கொள்ளக் கூடியவராகத் திகழ்வர்.

சிறுதுளி பெருவெள்ளம் என்பர். அதேபோல், ஒவ்வொரு தனிநபர்களும் சேர்ந்தது தான் சமுதாயமாகும். அத்தகைய தனிநபர்கள் ஒழுக்கம், நேர்மையை கடைப்பிடிக்கும் போதுதான் சிறந்த சமுதாயம் உருவாகும். அத்தகைய சிறந்த சமுதாயத்தில் மட்டுமே பின்தங்கிய மக்களுக்கு நீதிகளைக் கொண்டு சேர்க்க முடியும்.

உலகத்தில் ஏராளமான நல்ல விஷயங்கள் உள்ளன. அவற்றை தேடிப் பெறுவதற்கு உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு உழைக்கும் போது பொறுமை, விடா
முயற்சி, நம்பிக்கை ஆகியவையும் அவசியமாகும். எல்லோருக்கும் சமமான வலிமை இருக்க வாய்ப்பில்லை. சிலர் கல்வியிலும், சிலர் விளையாட்டிலும், சிலர் கலைகளிலும் சிறந்த விளங்குவர். அத்தகைய திறன்களை அவரவரே கண்டு உணர்ந்திடவும், அவ்வாறு உணர்ந்த பிறகு அதை மேம்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

வாழ்க்கையில் எப்போதும் ஆபத்துகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். ஆபத்துகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றால் பலருக்கு முன்னுதாரணமாக திகழலாம். தோல்வியுற்றால் பலருக்கு வழிகாட்டிய இருக்க முடியும். எனவே, மாணவர்கள் ஆபத்துகளை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.முருகன் வரவேற்றார். மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பதிவாளர் வெ.பெருவழுதி, ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், திமுக முதன்மைச் செயலர் துரைமுருகன், எம்எல்ஏ ஆர்.காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Courtesy: தினமணி

புகைப்படங்கள் : திரு. Immanuvel Prasanna kumar

Source

0