மண் சாலை: உதவிக்கரம் நீட்டிய ஆந்திர மக்கள்

மண் சாலை: உதவிக்கரம் நீட்டிய ஆந்திர மக்கள்

March 9, 2018 0 By AmburTimes
Spread the love

2018-03-09 04:51:35

மண் சாலை: உதவிக்கரம் நீட்டிய ஆந்திர மக்கள்   click here view original

தமிழக மக்களின் பயன்பாட்டுக்காக ஆந்திர வனப் பகுதியில் ஆந்திர மக்கள் தங்களுடைய சொந்த செலவில் மண் சாலை அமைத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் எல்லையோரம் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம் அமைந்துள்ளது. சித்தூர் மாவட்டத்தில் பலமநேர் சட்டப்பேரவை தொகுதியில் விருபாட்சிபுரம், சப்பிடிப்பள்ளி ஆகிய பகுதிகளில் பக்கவாதம் தீர்க்கும் சித்த மருத்துவமனைகளும், மோரத்தை அடுத்த கேட்லபுரத்தில் தோல் நோய் ஆராய்ச்சி மருத்துவமனையும், பேலுப்பள்ளி பகுதியில் எலும்பு மூட்டு சிகிச்சையும் புகழ்பெற்றுள்ளது. அதே போல் பலமநேர், பைரெட்டிப்பள்ளி, புங்கனூர் வாராந்திர சந்தைகள் புகழ் பெற்றவையாகும். பைரெட்டிப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள சனீஸ்வரன் கோயிலும் பிரசித்தி பெற்றதாகும்.
விருபாட்சிபுரம், சப்பிடிப்பள்ளியில் உள்ள பக்கவாத நோய் தீர்க்கும் மருத்துவமனைக்கும், பேலுப்பள்ளி எலும்பு மூட்டு சிகிச்சை மையத்துக்கும் அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் தமிழகம், புதுச்சேரி, கர்நாடக மாநில பகுதிகளில் இருந்து சிகிச்சைக்காக செல்கின்றனர். பேர்ணாம்பட்டு அருகே உள்ள அரவட்லாவில் இருந்து, ஆந்திரத்தின் நெல்லிப்பட்லா வழியாக வனப்பகுதியில் செல்லும் குறுகலான பாதையை சிலர் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தங்களுடைய சொந்த செலவில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வனப்பகுதியில் புதிதாக தமிழக எல்லை வரை மண் சாலை அமைத்துள்ளனர்.

இதுகுறித்து ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகிச்சை மையங்களுக்கும், வாரச் சந்தைகளுக்கும் பயணிப்போர் கூறியதாவது: நோயால் பாதிக்கப்பட்டவர்களை விரைந்து அழைத்துச் செல்ல குடியாத்தம், பலமநேர் வழியாகவும், பேர்ணாம்பட்டு, வி.கோட்டா வழியாகவும் செல்ல வேண்டும். இதனால் கால நேரமும் அதிகமாகிறது. பேர்ணாம்பட்டு நகரில் இருந்து இந்த சாலைகளில் சுமார் 75 கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டும். இதே சிகிச்சை மையங்களுக்கு அரவட்லா, நெல்லிப்பட்லா வழியாகப் போனால் சுமார் 25 கி.மீ. தொலைவே உள்ளது. எனவே புதிதாக ஆந்திர வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மண் சாலை வழியாகச் சென்று வந்தால் நேரமும், தொலைவும் குறைவாக இருக்கும். அதனால் எங்களுக்கு இந்த மண் சாலை வரப்பிரசாதாக அமைந்துள்ளது.

இந்த மண் சாலை வழியாக பலமநேர், பைரெட்டிப்பல்லி, மதனப்பள்ளி, புங்கனூர் சர்க்கரை ஆலை, போயகொண்டா கெங்கையம்மன் கோயில், மதனபள்ளி ஆர்சேலி மலையில் அமைந்துள்ள ஆஸ்துமா மருத்துவமனை போன்ற இடங்களுக்கும், கர்நாடக மாநிலத்தின் முல்பாகல், கோலார், சிந்தாமணி போன்ற பகுதிகளுக்கும் செல்ல வசதியாக உள்ளது. ஆந்திர வனப்பகுதியில் அமைத்துள்ள இந்த மண் சாலையை தார்ச் சாலையாக மாற்றினால் சென்று வர மிகவும் எளிதாக இருக்கும் எனத் தெரிவித்தனர்.

ஆந்திர வனப் பகுதியில் புதிதாக அமைத்துள்ள மண்சாலை பகுதியிலும், அரவட்லா மலைப்பாதை பகுதியிலும் யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால், இரு மாநிலங்களைச் சேர்ந்த வனத் துறை அதிகாரிகள் அவ்வப்போது ரோந்து செல்கின்றனர். அதேபோல் இந்த வழித் தடங்களில் அரிசி கடத்தல், கள்ளச்சாராயம் கடத்தல், வெளி மாநில மது பாட்டில்கள் கடத்துவதைத் தடுக்க இரு மாநில போலீஸாரும் தொடர்ந்து கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தினமணி

Source
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/mar/09/மண்-சாலை-உதவிக்கரம்-நீட்டிய-ஆந்திர-மக்கள்-2876990.html
0