ஆம்பூர் அருகே இறந்த  மான் சடலத்துடன் பொதுமக்கள் 5 மணி நேரம் போராட்டம்

ஆம்பூர் அருகே இறந்த மான் சடலத்துடன் பொதுமக்கள் 5 மணி நேரம் போராட்டம்

February 15, 2018 0 By AmburTimes
Spread the love

2018-02-15 22:47:02
ஆம்பூர் அருகே இறந்த மான் சடலத்துடன் பொதுமக்கள் 5 மணி நேரம் போராட்டம்.

தொடர்ந்து காட்டு
மான்களை வேட்டையாடும் நாய்கள்.

ஆம்பூர் வனச்சரகத்தில் பல்வேறு காப்புக்காடுகள் உள்ளன.இதில் மிட்டாளம் பகுதிகளை ஒட்டி உள்ள துருகம் காப்புக்காடுகள், பைரப்பள்ளியை ஒட்டி உள்ள ஊட்டல் மலை காப்புக்காடுகளில் ஊட்டல், மாடு ஊட்டல், ஜம்பு ஊட்டல், ரெங்கையன் கிணறு, சேஷவன் கிணறு, கொண்டப்பட்டியான் சுனை, பெருங்கானாறு, தேன்கல் கானாறு, கோனேட்டி கிணறு கானாறு என பல்வேறு வற்றாத நீர்நிலைகள் உள்ளன.

அதே சமயம் நீர்நிலைகளை ஒட்டி பசும் புல்வெளிகள், நெடிய உயர்ந்த மரங்களும் தோப்புகள் காணப்படுவதால் புள்ளிமான், கடமை மான், காட்டு ஆடுகள், காட்டெருமைகள் உள்ளிட்ட விலங்கினங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.இந்த காப்புக்காடுகள் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மான்களும், அரியவகை கடமான்களும் மிகுந்து காணப்படுகின்றன.கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நூற்றுக்கணக்கான மான்கள் வேட்டை நாய்களால் கொல்லப்பட்டு வருவது
சமூக மற்றும் வன உயிரின
ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று காலை பைரப்பள்ளி அருகே கல்லல் மேடு பகுதியில் வழி தவறி வந்த இரண்டு மான்களை பத்துக்கும் மேற்பட்ட வேட்டை நாய்கள் இரண்டு குழுவாக பிரிந்து, துரத்தி கொண்டும், கடித்து கொண்டும் ஓடுவது கண்டு பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து விட்டு பொது மக்களே மான்களை காப்பாற்றும் பணியில் ஈடுப்பட்டனர். இருப்பினும் நாய்களால் கடித்து குதறப்பட்ட ஒரு மானை மட்டுமே பொது மக்களால் மீட்க முடிந்தது.பொதுமக்களால் மீட்கப்பட்ட
மான் சுமார் மூன்று வயது உடைய பெண் மான் ஆகும்.மீட்கப்பட்ட அந்த பெண் மானும் சிறிது நேரத்தில் உயிர் இழந்தது.வேட்டை நாய்களால் காட்டுக்குள் துரத்தி கடிப்பட்ட ஆண் மான் நிலை என்னவென்று தெரியவில்லை.அந்த
ஆண் மான் சுமார் மூன்று வயது உடையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

வேட்டை நாய்களிடம் இருந்து மானை பொதுமக்கள்
மீட்ட பின்னர் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் வந்தனர்.மானின் சடலத்தை மிட்டாளத்தில் உள்ள வனக்குழு அலுவலகம் அருகே கொண்டு வரும் போது, மானின் சடலத்தை வனக்குழு அலுவலகம் எதிரே போட்டு, தொடர்ந்து வேட்டை நாய்களால் காட்டு மான்கள் அழிவதை தடுக்க வேண்டும், ஊட்டல் காப்புக்காடுகளை “மான்கள் சரணாலயம் ” ஆக அறிவிக்க வனத்துறையினர் பரிந்துரைக்க வேண்டும், அதன் பின்னரே இறந்த மானின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் ” என பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆம்பூர் வனச்சரகர் ஜெயபால், கிராம வனக்குழு தலைவர் தேவன், வனக்குழு உறுப்பினர்கள் பச்சையப்பன், பழனி ஆகியோர் பொது மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இனி ஊட்டல் பகுதியில் வேட்டை நாய்களால் காட்டு மான்கள் கொல்லப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் .மான்கள் சரணாலயம் அமைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்த பின் பொது மக்கள் கலைந்து சென்றனர்.பின்னர் மிட்டாளம் கால்நடை மருத்துவர் ரமேஷ்குமார் இறந்த மானை பிரேத பரிசோதனை செய்த பின் வனக்காப்பாளர்கள் காந்தராஜ், செல்வராஜ், ராமு ஆகியோர் மானின் சடலத்தை மேர்லமிட்டா வனப்பகுதியில் எரியூட்டினர்.

மான் வகைகள் அதிக அளவில் உள்ள
இந்த காப்புக்காடுகளை “மான்கள் சரணாலயம் ” ஆக அறிவித்து பராமரிக்க வேண்டும் என இப்பகுதி விலங்கின ஆர்வலர்களும், பொது மக்களும் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை வைத்து முயற்சித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மிட்டாளம் ஊராட்சியில் நடந்த “கிராம சபா ” கூட்டத்தில் ஊட்டல் காப்புக்காடுகளை “மான்கள் சரணாலயமாக ” அறிவிக்க கோரி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை வைத்தும், முறையிட்டும் வருகின்றனர்.

இறந்த மானின் சடலத்துடன் கிராம வனக்குழு அலுவலகம் எதிரே சுமார் 5 மணி நேரம் பொது மக்களும், வன ஆர்வலர்களும் போராட்டத்தில் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
Courtesy: Mr. Mandradiyar ManogaranSource

0