பொருளாதாரம் ஓர் எளிய அறிமுகம்

பொருளாதாரம் ஓர் எளிய அறிமுகம்

February 10, 2018 0 By AmburTimes
Spread the love

2018-02-10 07:57:05
பொருளாதாரம் ஓர் எளிய அறிமுகம்

பொருளே ஆதாரம் பொருளாதாரம்

மனித வாழ்வு பொருளை ஆதாரமாகக் கொண்டு அமைந்துள்ளது. பொருளின் இன்றியமையாத தேவையை மனிதன் ஒவ்வொரு நாளும் உணர்கின்றான். இதனால்தான் வான்புகழ் கொண்ட வள்ளுவர் , “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று கூறுகின்றார்.

மனிதன் தனக்கு வேண்டியவற்றைப் பெற்று வையகத்தில் வாழ்வதற்க்கு பொருள் தேவைப்படுகிறது. மனிதர்களின் பொருள்தேடும் நடவடிக்கைகளுக்கு மூலமாக அடிப்படைக் காரணமாக விளங்குவது மனிதனுடைய #விருப்பங்கள் ஆகும். இவ்விருப்பங்களை நிறைவு செய்ய #முயற்சிகள் அவசியமாகின்றன. மனித முயற்சிகளின் மூலம் பெறுகின்ற வருவாயால் மனிதன் தனக்கு வேண்டியவற்றைப் பெற்று பயன்படுத்துகின்ற பொழுது #மனநிறைவு கிடைக்கின்றது. ஆகவே
மனிதனின் அன்றாட நடவடிக்கைகளைப் பற்றி ஆராய்ந்து விளக்குவது பொருளாதாரமாகும்.

பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் ஆடம்ஸ்மித்

பொருளாதாரத்தைப் பற்றி ஆராய்ந்தவர்களில் முதன்மையானவராக இவர் திகழ்ந்ததால் பொருளாதாரத்தின் தந்தை என இவர் அழைக்கப்படுகிறார்.

பண்டைய காலத்திலும், இடைகாலத்திலும் பல்வேறு அறிஞர்களும், மேதைகளும் பொருளாதாரக் கருத்துக்களை கூறியிருக்கின்றனர். இருப்பினும் அவர்களது ஆய்வு அரசியல், அற இயல் ஆகியவற்றின் அடிப்படையில் தான் அமைந்திருதது. அதனால்தான் அரசியலின் ஒரு பிரிவாக பொருளியல் கருதப்பட்டு வந்தது.

ஆடம்ஸ்மித்தின் நாடுகளின் செல்வம் என்ற நூல் வெளிவந்த பிறகுதான் பொருளாதார இயலின் வரலாறு தொடங்கியது.

ஆடம்ஸ் மித் பொருளாதாரத்தை செல்வத்தைப் பற்றிய அறிவியல் என குறிப்பிட்டார். அதாவது மனித நடவடிக்கைகள் அனைத்தும் செல்வத்தை பெருக்குவதையே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறது என்றார்.

அதன் பின் வந்த பொருளியல் அறிஞர் ஆல்பிரட் மார்ஷல் செல்வத்திற்க்கு அளிக்கப்பட்ட முதன்மையான இடத்தை மறுத்து , மனித நலத்திற்க்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

அதாவது பொருளாதாரம் என்பது ஒருபுறம் செல்வத்தைப் பற்றி ஆராய்வதும் அதைவிட முக்கியமான மற்றொரு புறம் மனித நலத்தைப்பற்றி ஆராய்வதாகும் என குறிப்பிட்டார்.

பொருளாதாரம் என்பது ஒரு நடைமுறை அறிவியலாகும். அதாவது மனிதனுடைய அன்றாட வாழ்க்கையில் பொருள் முக்கிய தேவையாகும். பொருளை உற்பத்தி செய்வதும், அதைப் பெற்று நுகர்வதும் பயன்படுத்துவதும் மனிதனின் நல்வாழ்விற்காகத்தான் என்பதை மறுக்க முடியாது. அதனால்தான் பொருளியலில் மனிதனுக்கு முதலிடமும், செல்வத்திற்க்கு இரண்டாவது இடமும் அளிப்பதே சரியானது .
மனித நலனை புறக்கனித்துவிட்டு செல்வத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருளாதாரம் முழுமையானதாக இருக்க முடியாது என்பது மார்ஷலின் கருத்தாகும்.

தொடரும்……..

ஆக்கம்
திரு. பரமேஷ்வரன் M.A.B.Ed.B.L.
முதுகலை ஆசிரியர் பொருளியல்

ஆம்பூர், வேலூர் மாவட்டம்

Source

0
வ,ம,மனந